சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி பதில்
ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.
பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?
மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?
மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?
பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!
பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!
மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.
மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?
பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.
மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?
கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.
No comments:
Post a Comment