Sunday, September 3, 2017

ஓணம் பண்டிகை

ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் சொல்லி ஒரு கூட்டம் கிளம்பி இருக்கனுமே.....

ஓணத்தின் தொடக்கம் தமிழகத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் இருக்கும் தேவார பாடல் பெற்ற தலமாகிய திருமறைக்காடு  ஆகும்.

ஒருமுறை பசியுடன் இருந்த #எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக #எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து  எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

விளக்கம் :

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில்
ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய #எலி உண்ண வந்த போது  அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி  விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால்
சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை
எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து
குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

----------------------------------------------------------------------------------

இனி யாராவது  ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் கேட்ப்பேங்க.........

தென்னாடுடைய #சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்கள் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசனை பூசித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது.

நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து  கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.

கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.

அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் தான் #திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

----------------------------------------------------------------------------

சிவதலம் பெயர் :திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர் :மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்

இறைவி பெயர் : வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்

செல்லும் வழி: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.