Wednesday, March 29, 2017

தமிழாய் பிறந்த முருகன்

முருகனே தமிழ், 
தமிழ் மொழியே முருகன்

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்றதிருநாமம்.முகுந்தன் – மு – திருமால்
ருத்ரன் – ரு – சிவன்
கமலோத்பவன் –  – பிரம்மன்

''முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார்

தமிழ்க் கடவுள் என்பது முருகனையேமொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்குவிழிகளோ பன்னிரண்டுஅருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு!முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள்முத்தமிழ் மொழியின்மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டுஅவை வல்லினம்மெல்லினம்,இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளனமுருகன் கை வேலாயுதம்ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டுபிற மொழி எதிலும்இல்லாத சிறப்பெழுத்து!

Image result


முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள்அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர்இதுவேயாகும்).
 
முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சிக் கடவுளான முருகன் தமிழ் மக்களை ஆண்டு வந்திருக்கின்றான். மலை மீது கோவில் கொண்டுள்ள  முருகன் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடம் கொண்டு நிலை பெற்ற கடவுளாகும். தமிழகத்தில் பலர் ‘பரமகுரு’ என்றும் ‘குருநாதன்’ என்றும் முருகனை வணங்கி வருகின்றார்கள். உலகில் பல இடங்களில் முருக வழிபாடு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முருக வழிபாடானது தமிழ் மக்களிடையே காணப்பட்ட மிகத் தொன்மையான வழிபாடாகும். சில காலங்களுக்கு முன் தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளின் போது சேவற் சிலைகள், காவடிச் செதில்கள், வேல் என்பன காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காவடி என்றாலே அது முருகனுக்கு மட்டும் உரியது

Friday, March 10, 2017

சாந்தலிங்க அடிகளார் வரலாறு

போற்றி ஓம் நமசிவாய

மாசி மகம் நாளில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் ஆதி குருமுதல்வர்
" அருள்திரு சாந்தலிங்க அடிகளார் " குருபூசை
.........................................................................................

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---

திருமந்திரம்
.........................................................................

அடிகளார் வரலாறு:



அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் தொண்டை நாட்டில் தோன்றி கொங்கு நாட்டில் கோவைக்கருகில் பேரூரில் ஆதினம் நிறுவியவர். இவரது காலம் 17 ஆம் நூற்றாண்டு. திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும், சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் அருள்மிகு நமச்சிவாய மூர்த்திகள் அவர்களின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கித் திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவப்பிரகாசரைக் குருவாகப் பெற்றவர்.

தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில் சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டமரபே “திருக்கயிலாயமரபு” எனப் பெற்றது.

கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியெம்பெருமானுக்கு அருளிச்செய்கிறார். அவ்வண்மையினை நந்தியெம்பெருமான் சனற்குமாரமுனிவர்க்கு அருளிச்செய்தார். சனற்குமாரர் சத்திய ஞானதரிசினிகளுக்கு அருளிச்செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு “திருக்கயிலாய அகச்சந்தான மரபு” எனப் போற்றப் பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார். இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்குத் தோன்றியவர். குழந்தைப்பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் அகத்தால் இனிதுநோக்கி உண்மைப்பொருளை நம்பிக்கு அருளினார். அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி “மெய்கண்டார்” ஆனார்.

இவரது தத்துவஞானத்தையுணர்ந்த அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை விரித்து அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார். இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம்மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை (சித்தாந்த அட்டகம்) அருளிய பெருமைக்குரியவர்.

இவர் வழிவந்த அருள் நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவர் தில்லையில் முட்டுப்பட்டிருந்த வழிபாட்டைத் தொடரச் செய்தவர். அதன் நிமித்தம் இறையாணையின் வண்ணம் தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசித்தாந்த மரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவப்பிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப்பணியாற்றி வந்தார். அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும், அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவப்பிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து “வீரசைவதீக்கை” அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார்.

தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம் சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்துப் பல அருட்பணிகளை ஆற்றி வந்தார். பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளைக் கண்டு வணங்கி அருள்பெற்று மகிழ்ந்தார். கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது. சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட்குறிப்பின்படி சிவப்பிரகாசசுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையைச் சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்கரின் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார்.

சாந்தலிங்கர் மக்கள் உய்யும் பொருட்டுக் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்னும் நூல்களை அருளிச்செய்தார். இவை முறையே உயிர்க்கருணையையும், பத்தியையும், வைராக்கியத்தையும், சிவஞானத்தையும் உணர்த்துவன.

மாணாக்கர் பலர் நம் குரு முதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகளார் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்துப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும், உமையம்மையுமாகக் காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர். இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக்குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம், முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்போம்” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கி முழுத்துறவியாகிறார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின்முகப்பில் பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறது.

குமாரதேவர் எனும் கன்னட அரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருவுள்ளக்குறிப்பின்படி பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசாதுறவு, சுத்தசாதகம் ஆதிய பல சாத்திரங்களையும் அருளினார். திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பரதேசிகர் என்பார். அவரைக் குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப் பெருமானிடம் அழைத்து வந்தார். சிதம்பர அடிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்கர் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகளார் எழுதுய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும், நுட்பமும் செறிந்து விளங்குகிறது. இவரைக் குமாரதேவரின் சீடராக்கினார். இச்சிதம்பர அடிகளார் சென்னைக்கரிகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து ஆதீனம் ஏற்படுத்தி அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் “திருப்போரூர் சந்நிதிமிறை” என்று வழங்கப்படுகின்றன.

இறையருளோடு குருவருளும் பெற்றுப் பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றிவளர்ந்த சாந்தலிங்கப் பெருமான் மாசித்திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில் ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும், திருமடமும் அணி காஞ்சிவாய்ப் பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.

தற்போது குருமகா சந்நிதானமாகக் கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தமிழகம் மட்டுமின்றி அனைத்துக் கண்டங்களுக்கும் சென்று சமயப்பணியும், தமிழ்ப்பணியும் ஆற்றிவருகிறார். முதன்முதலாக திருநெறிய தமிழ்முறைப்படி கோயில் குடமுழுக்கு, வேள்விகள், திருமணம், புதுமனை புகுவிழா என அருளியல் மற்றும் வாழ்வியல் சடங்குகளையும் நடத்திய பெருமை இவரையே சாரும். திருமடத்தின் இளைய பட்டமாகவும் உதகை (நீலகிரி) காந்தள் ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் தவத்திரு. மருதாசல அடிகள் அருளாட்சி புரிந்துவருகிறார்.


உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் குயிலி

உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் குயிலி
இந்த வீர பெண் மணியின் வரலாற்றை முழுமையாக படித்தால் நமக்கு பல விஷயங்கள் புரியும் இங்கு சாதி வெறியை விதைத்தவர்கள் ஆர்காடு நாவப் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயனும் தான்.
படித்து பாருங்கள் இந்த குயிலியின் வரலாற்றை

இரண்டாம் உலகப்போர் நடைபெறு வதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொடைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த ஈகத்துக்குரிய வீரமங்கை யின் பெயர் குயிலி. அவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சேரியில் பிறந்தவர் என்பதாலும் வரலாற்றின் பக்கங்களில் திராவிடத்தால் வஞ்சிக்கப்பட்டிருக் கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
குயிலியின் பின்னணி
ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்புப் போராட்டத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரனார் போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கைச் சீமையின் இராணி வேலு நாச்சியார் மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் காலத்தால் அழிக்க முடியாதவை. 1750 காலகட்டத்தில் ஏறக்குறைய பூலித்தேவரும் ஒண்டிவீரரும் நெல்லைச் சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிவகங்கைச் சீமையில் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் ஆங்கிலேயரையும் அவர்களது கூட்டாளியான ஆற்காடு நவாப்புகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சூழ்ச்சியால் முத்துவடுகநாதர் எதிரிகளால் கொல்லப்படு கிறார். உடன் அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகிறார். இந்நிலையில் இழந்த நாட்டை மீட்டெடுக்க முத்துவடுகநாதரின் முதல் மனைவியான இராணி வேலுநாச்சியார் சபதமேற்கிறார். அதற்காக, 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பெரும் படையைக் கட்டமைத்து சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார்.
வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி.
குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப் பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்?
வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.
அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவு களையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக் கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ''எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள். இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற் காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர் களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் கிஞ்சித்தும் பெறாத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக் கிறாள்.
''சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத் திருக்கிறாளே?
உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.''
வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.
நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் வேலு நாச்சியார் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான்.
சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார்.
வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.
அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது.
என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான்.
வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

மருது சகோதரர்களின் ஆன்மீகமும் வீரமும்

மருது சகோதரர்கள்
______________________



ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்.

இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து "தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும். எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது. தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தயாரானது .

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார். இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது. அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.
பெரிய மருது "தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்' என்றார். அதற்கு சிற்பி "உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.
சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர். தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.

"பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

"மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.
ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.
எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார் கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

"போரில் சரணடையா விட்டால் நீங்கள் கட்டிய காளையார்கோயிலை இடித்து விடுவோம்" என்று ஆங்கிலேயர்கள் கூறியதால் தங்களது உயிரை விட கோயிலே முக்கியம் என்று ஆங்கிலேயரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டவர்கள் மருது சகோதரர்கள்.

நாட்டுக்காகவும், கோயில்களுக்காகவும் வாழ்ந்த மருது பாண்டியர்கள் இந்த தேதியில் 24-10-1801-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.